Saturday, October 22, 2016

பண்ணைக்கோழியும் பரலோக பயணமும்..

       ஏதேச்சையாக நேற்று ஒரு பேலியோ குழுவில்,அக்குழுவின்  முக்கிய நபராக கருதப்படும் ஒரு நண்பர் எழுதிய  பண்ணைகோழி பற்றிய கட்டுரையை படிக்கச் நேர்ந்தது.அவரை பின்தொடரும் பல்லாயிர கணக்கான மக்களுக்கு அவரது பரிந்துரை "தைரியமாக பண்ணைக்கோழிகள் உண்ணலாம் , அதனால் ஒரு பின் விளைவுகளும் கிடையாது." என்பது , அதை அவர் மிக உறுதியாக பதிவு செய்திருந்தார்.. அவர் குழுவில் உள்ள ஒரு விலங்கியல் மருத்துவரும் , 10 வருடங்களாக கோழிபண்ணை ஒன்றை நடத்திவரும்  முட்டை வியாபாரி ஒருவரிடமிருந்தும்  பெற்ற தகவல்களை கொண்டு அந்த ஆராய்சி கட்டுரை எழுதி இருப்பதாகவும் , பண்ணை கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாட்டிக்குகள் சிறிதளவும் ஆபத்தற்றவை எனவும் ,அவை  மனிதனுக்கு மிக மிக மிக அரிதாகவே பாதிப்பை உண்டு செய்யும்.உண்டு செய்யாது ,உண்டு செய்யாலாம் என்ற அச்சம் மட்டுமே ஆராய்ச்சியாளர்களுக்கு உண்டு என்றும் கூறி  இருக்கிறார்(இந்த உண்மை அறியாமல் அமெரிக்க ,ஐரோப்பிய நாடுகள் , தாங்கள் நாட்டில் அந்த ஆபத்தற்ற ஆண்டிபயாட்டிகளை கொண்ட சிக்கனை தடை செய்திருக்கிறார்கள் ) ,கோழிகளுக்கு ஹோர்மோன்கள் ஊசி செலுத்தினால் அவை இறந்துவிடும் என்பதும் ஒரு புதிய தகவல்..

இக்கட்டுரையால் ,போதி மரத்தடியிலில் அமர்ந்தெழுந்த புத்தன் போல்  ஞானம் பெற்ற பேலியோ கண்மணிகள், வழக்கம்போல் தங்கள் ஆனந்த கண்ணீரால் ,முகநூல் விமர்சன பக்கங்களை நனைத்து கொண்டிருக்கிறார்கள்...சரி இனி நம் கதையை பார்ப்போம்.

மக்கள்தொகை பெருக்கம், மட்டன் மட்டும்  நாட்டுக்கோழி போன்ற அசைவ உணவுகள் அனைவருக்கும்  கிடைப்பதன் சாத்தியத்தை பெரும் அளவு  குறைத்துவிட்டது என்றே சொல்லலாம்.இவைகளின்  விலை(கிலோ 400 ரூபாய்), சாதாரண மனிதர்களுக்கு  வாரம் ஒருமுறை வாங்கி உண்ணும் அளவுகூட
வாய்ப்புகள் அளிக்கவில்லை..தற்போது நாட்டு கோழிகள் பற்றாக்குறைக்கும் , பொருளாதார நிலையில் பின்தங்கி இருப்போரின் அசைவ தேவைகளுக்கும் , வடிகாலாக இருந்து வருவது பிராய்லர் சிக்கன் எனப்படும் பண்ணை கோழிகள்..பண்ணை கோழிகளின் தீமைகள் பற்றி  ஊடகங்கள் &செய்திகள் வாயிலாக மக்கள் ஓரளவு அறிந்திருந்தாலும் , தன்  பொருளாதார நிலை கருதியும் ,இதன் சுவைக்காகவும்  , உடல் நலனுக்கு கேடு என தெரிந்தும்  , வாரம் ஒரு முறைதானே ,என்ன ஆகிவிட போகிறது என தனக்கு தானே ஆறுதல் கூறிகொண்டு இதனை உண்டு வருகிறார்கள்..

பிராய்லர் கோழி என்பது உலகின் இறைச்சியின் தேவையை சரிக்கட்ட, சாதரண 200 நாட்கள் வளரும் நாட்டுக்கோழிகளின்  மரபணுவில் மாற்றம் செய்து ,குறுகிய காலத்தில் மிக அதிக எடையுடன் வளர  உருவாக்கப்பட்ட கோழிவகை. 45 நாளில் 2.5 கிலோ எடையை அடைவது , மிக எளிதான காரியமல்ல,இதற்கு  இவை எண்ணற்ற மரபணு மாற்றத்திற்கு  உட்பட்டிருக்கும், உதாரணமாக பசிக்கிறதோ  இல்லையோ கோழி தொடர்ந்து, தீவனம் தின்றுகொண்டே இருக்கவேண்டும், எனவே எப்போதும் பசியுடன் இருக்குமாறும்,தண்ணீர்தாகம் அதிகம் எடுக்குமாறும் , இதற்கு தக்கவாறு ஹோர்மோன்கள்& அமிலங்கள்  சுரக்குமாறும், அதேபோல் கோழிகளுக்கு  அதிகம் நடக்க தோன்றக்கூடாது என்பதற்க்காக கோழியின் கால்களுக்கு வலு மிக குறைவாக இருக்குமாறும்( நடந்தால் எடை குறையும் ) , இதுபோல எண்ணற்ற மரபணு மாற்றங்களினால் இந்த கோழிகளின்  உடல் இயங்கும் முறை மற்றும் ஹோர்மோன்கள் செயல்பாடு  முற்றிலுமாக மாற்றியமைக்கப்படுகிறது..மாற்றியமைக்கப்பட்ட  உடல் கூறுகளால்  இவைகளின் நோய்எதிர்ப்பு சக்தி  முற்றிலுமாக அழிக்கப்பட்டு மிக சிறிய நோய்த்தாக்கத்தை கூட தாங்கும் வல்லமையை இழந்துவிடுகிறது. வெப்ப நிலையில் சற்று அதிகரித்தால் கூட கோழிகள் இறந்துவிடும், பண்ணை வைத்து இருப்பவர்கள்  வெப்ப நிலை சிறிது அதிகமானாலும்  உடனடியாக நீர்தூவி(sprinler ) பயன்படுத்தி பண்ணைகளின் வெப்பநிலையை குறைப்பார்கள்.

சரி சிறு வெப்பத்தை கூட தாங்காத இந்த கோழிகள் எப்படி பறவை காய்ச்சல் ,சளி (ஆமாம், வேறு தண்ணீர் மாற்றினால் ,மனிதர்கள் போல், இவற்றுக்கும் சளி பிடித்து கொள்ளும்) போன்றவற்றை தாங்கும்??

ஆன்ட்டி பயாடிக் தான் வேறென்ன?

பிராய்லர் கோழிகளுக்கு நோய் வராமல் இருக்க மிக  அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் தீவனங்கள் மூலமாகவும்,ஊசி மூலமாகவும் கொடுக்கப்படுகிறது. ஆனாலும் அனைத்து கோழிகளையும் இந்த  ஆன்ட்டி பயாடிக்களால் குணப்படுத்தக்கூடியமுடிவதில்லை(ஒருவர் 5000 கோழிகள் பண்ணையில்  வளர்த்தால்,அதில் குறைந்தபட்சம் 500 கோழிகள் கட்டாயம் சாகும், உங்கள் நண்பர்கள் யாரவது இத்துறையில் இருந்தால் ,கேட்டு உறுதி படுத்தி கொள்ளுங்கள் ),, மேலும் இறைச்சியை சாப்பிடும் நம்முடைய உட‌லி‌ல் உ‌ள்ள இயல்பான நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கடுமையாக பா‌தி‌க்க‌ப்படுகிறது.தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுபவர்களுக்கு  சளி & காய்ச்சல் போன்ற நோய்களுக்கு டாக்டர்கள் அளிக்கும் சாதாரண ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வேலை செய்யாது, இதனால் டாக்டர்கள் மருந்தின் வீரியத்தை அதிகப்படுத்துவார்கள். மருந்தின் வீரியம் அதிகமானால் பல பக்க விளைவுகள் ஏற்படும்..

 கடந்த 2014-ல் , சிஎஸ்இ(Centre for Science and Environment)-யால்   டெல்லி ,நொய்டா, குர்கான் போன்ற பகுதிகளில் மொத்தம் 70 கோழிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. அந்த கோழிகளின்  கிட்னி,ஈரல், தசை  என பல்வேறு உறுப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன, அதில்  40 சதவீத கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்டி பயாட்டிக் கொடுக்கபட்டிருப்பது  தெரியவந்தது.

முக்கியமாக 6 வகையான ஆன்ட்டி பயாடிக் மருந்துகள்  கோழிவளர்ப்பில் வழங்கப்பட்டு  வருகிறது,அவை  ஆக்சிடெட்ரா சைக்ளின், குளோர்டெட்ராசைக்ளின், ,டாக்சிசைக்ளின், என்ரோபிளாக்சசின், சிப்ரோபிளாக்சசின், நியோமைசின் ஆகியவை இதில் கடைசி 4 ஆன்ட்டி பயாடிக் வகைகளும் அளவுக்கு மிக அதிகமாக அளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிஎஸ்இ நடத்திய ஆய்வில் ஆன்ட்டி பயாடிக் வகைகள்  பரிசோதிக்கப்பட்ட அனைத்து கோழிகளிலும் ,இந்த 4 ஆன்ட்டி பயாடிக் வகைகள் அதிகமாக  முறையற்று பயன்படுத்தி இருப்பதை கண்டுபிடித்து உறுதிபடித்தியுள்ளனர்  சிஎஸ்இ ஆய்வாளர்கள். சிஎஸ்இ  நடத்திய மொற்றொரு ஆய்வில்  2002ம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டுவரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பெரும்பாலான நோயாளிகளுக்கு சிப்ரோபிளாக்சசின், ஆக்சிடெட்ரா சைக்ளின், டாக்சிசைக்ளின் போன்ற ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் வேலை செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் கிலோவுக்கு மூன்று  முதல் நூற்றி ஐம்பது  மைக்ரோகிராம் ஆன்ட்டி பயாடிக் மருந்துகளின் படிவுகள் சிக்கன் கறியில் இருப்பதாக  பிற ஆய்வுகள்  தெரிவிக்கின்றன. பொதுவாக  சிப்ரோபிளாக்சசின் என்பது  அனைத்து நோய்களையும் எதிர்க்கும் ஆன்ட்டி பயாடிக்  மருந்தாகும்.  ஆனால் சிக்கன் தொடர்ச்சியாக உண்பவர்களுக்கு இது வேலை செய்யாது ,இதன் பலனை மனித உடல் இழக்கும்போது கான்சர் தேவையில்லை  சாதாரண டைபாய்டு காய்ச்சல் மனித உயிரை பலி வாங்கிவிடும். மேலும் இறைச்சி உற்பத்தித் தொழிற்துறையில் அதிகமாக ஆன்ட்டி பயாடிக் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அரசு கடும் சட்டங்களையும் கண்காணிப்பு முறையையும் கொண்டு வரவேண்டும் என்கிறது சி.எஸ்.இ.அமெரிக்க & ஐரோப்பிய போன்ற மேலை நாடுகளில் இதற்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால்  இந்தியாவில் இதற்கென தனியான சட்டங்களோ ,வழிமுறையோ  பின்பற்றப்படுவது இல்லை...

பேலியோ டயட் என்ற பெயரில் ஆரோக்கியமாக வாழ தினமும் சிக்கன் வேண்டுமளவு உண்ணுமாறு  ஒரு குழுவில் பரிந்துரை செய்யபடுகிறது. அமெரிக்காவில் வாழும் நண்பர்கள் , எதை வேண்டுமானால் பின்பற்றலாம், எப்படியும் இருக்கலாம். ஏனென்றால் அங்கு உணவு தர கட்டுப்பட்டு வாரியம்  மிகுந்த அக்கறையுடன் அந்நாட்டு மக்களை பாதுகாக்கிறது.இங்கு இந்தியாவில் கதை வேறு. கோழி பண்ணையில் நோயால் செத்த கோழிகளை , கிலோ 25 ரூபாய் என மிக பெரிய உணவகங்கள் கூட வாங்கி சென்று சமைத்து பிரியாணி ,சில்லி சிக்கன் என மேல் தட்டு மக்களுக்கே விற்கிறார்கள்.இதில் ஆன்ட்டி பயாடிகாவது ,அங்கிள் பயாடிகாவது.இங்கு இதையெல்லாம்  கண்டுகொள்ள எவரும் இல்லை.

தயவு செய்து பேலியோ போன்ற மாய டயட்களை பின்பற்றி அப்பாவிகளாக உயிரை விட வேண்டாம்.அப்படியே பேலியோ பின்பற்றினாலும் சிக்கனை கண்டிப்பாக தவிர்த்து விடவும்...பண்ணை கோழிகளுக்கு ஆதரவாக கட்டுரை எழுதிய  நண்பருக்கு ஒரு வேண்டுகோள்...அமெரிக்காவில் செய்யும் /பின்பற்றும் அனைத்தையும்  இந்தியாவில் செய்ய முடியாது,புரிந்து கொள்ளுங்கள்.நல்லதோ கெட்டதோ நீங்கள் சொல்வதை நம்பும் ஒரு கூட்டம் உள்ளது அவர்களுக்கு நல்லவழி காட்டுங்கள். இது போன்ற தவறான தகவல்கள் வேண்டாம்.

sources:
இந்த லிங்கில் உள்ள விடியோவை பார்க்கவும் ,செய்தியையும் படிக்கவும்.
http://www.firstpost.com/living/chicken-lovers-beware-breeders-in-india-use-antibiotics-to-make-birds-fatter-1642335.html
http://timesofindia.indiatimes.com/city/kolkata/Poultry-goods-can-harm-your-system/articleshow/6811893.cms
http://www.thehindu.com/sci-tech/health/policy-and-issues/antibiotics-in-the-chicken-we-eat/article6376564.ece



இணையத்தில் இது தொடர்பாக  எண்ணற்ற தகவல் உள்ளன ,சிறுது நேரம் செலவிட்டு தேடி பார்த்து தெளிவு பெறுங்கள்...உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் தான் உழைக்க வேண்டும் , மற்றவரின் உழைப்பை எதிர்பார்த்தால்,  உங்களை அவர்கள் லாபத்திற்கு பலிகொடுக்கும்  வெள்ளாடாகவே பார்ப்பார்கள்.. 

1 comment:

  1. hormon injection podaratha solrathu unmaya?

    ReplyDelete