Wednesday, October 26, 2016

காக்கையும் பேலியோவும்

முன்னோரு காலத்தில் ஒரு அடர்ந்த காட்டில் ஒரு அழகிய குளம் இருந்தது. அந்த குளத்தில் பல வாத்துகள்   கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தன.அந்த குளத்தை ஒட்டி ஓங்கி வளர்ந்துள்ள ஒரு ஆலமரத்தில் காக்கைகள் ,குருவிகள் ,அணில்கள்  என பல்வேறு  பறவைகளும் விலங்குகளும் மகிழ்ச்சியாக வசித்து வந்தன. அந்த காக்கை கூட்டத்தில் உள்ள ஒரு தாழ்வு மனப்பான்மை கொண்ட காக்கை ஒன்றிற்கு தன் கருப்பு நிறத்தின் மேல் எப்போதும் ஒரு வருத்தம்,வெறுப்பு, தான் ஏன் குளத்தில் நீந்தும் வாத்துகளை போல  வெண்மையாக இல்லை, நான் மட்டும் வெள்ளையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என அடிக்கடி அதன் நண்பணான  அணிலிடமும், சக காக்கைகளிடமும் புலம்பி திரியும். அதன் நண்பர்கள் நிறத்தில் என்ன இருக்கிறது , காக்கைகளின் இயறகை நிறம் கருப்பு,  இதில் அவமானம் என்ன இருக்கிறது, இருப்பதை  வைத்து மகிழ்ச்சியாக இரு என அறிவுரைகள் கூறினாலும் , அதன் காதில் எதுவும் விழுகவே இல்லை. குளத்தில் உள்ள வாத்துகளின்  நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வந்த  காக்கை,ஒரு வில்லங்கமான முடிவுக்கு வந்தது.அதாவது  வாத்துகளை போல் வெண்மையாக மாற, வாத்துகளின் வாழ்க்கைமுறையை நாம் பின் பற்ற வேண்டும் என தீர்மானித்து , அதன் வாழ்க்கை முறையை வாத்துகள் போல் மாற்றி கொண்டது .அதன்படி பறக்காமல் எப்போதும் தண்ணீரில் எப்போதும் நீந்திக்கொண்டே இருப்பது,கா கா என கத்தாமல் வாத்துகள் போல் பேக்,பேக்  என கத்த முயல்வது , மரத்தின் மீது உறங்காமல் வாத்து கூட்டங்களுடன் தரையிலேயே படுத்து உறங்குவது போன்று தன்னை ஒரு முழு வாத்தாக நினைத்து வாழ தொடங்கியது..ஆரம்ப நாட்களில் மிகவும் சந்தோசமாக,நாம் வெள்ளையாவோம் என  மிகுந்த தன்னம்பிக்கையுடன் நீந்தி வந்தது.நாட்கள் கடந்தன, ஆனால் நிறம் மாறவில்லை , மாறாக தண்ணீரிலேயே இருந்ததில் அதன் இறகுகள் நனைத்து உதிர்ந்து ,அதன் உடல் நலம் மிக மோசமானது.பேக்,பேக்  என கத்த முயன்றதில் தொண்டை நரம்புகள் கிழிந்து உணவு உண்ண முடியாமல் போனது. பறக்க முடியாமல் சோர்ந்து போய் பறக்க முடியாமல் ஒருநாள்  குளத்தடியில் கிடக்கும்போது அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று, அந்த காக்கையை கவ்வி சென்றது.

உடல் எடை குறைப்பில் மட்டுமே பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த பேலியோ , இன்றைக்கு சிலரால் அனைத்து நோய்களுக்கும்  தீர்வுஎன போலியாய்  நம்முன்னால் நிறுத்த பட்டிருக்கிறது. பேலியோ டயட் ஒரு நீண்ட நாள் பின்பற்ற தகுந்த டயட் முறை அல்ல.பேலியோ டயட்டில் உள்ள முதன்மையான முக்கியமான பிரச்சனை ,நம் முன்னோர்கள் என்ன உணவு உண்டார்கள் என்பதை பற்றி உறுதியாக எதுவும் நமக்கு தெரியாதது தான். பேலியோ காலத்தில்  பல்வேறு பகுதியில் வசித்து வந்த நம் முன்னோர்கள் , அந்தந்த  நிலப் பரப்புக்கேட்ப  அங்கு கிடைக்கும் உணவு பொருள்களை கொண்டு உணவு முறைகளை அமைத்துக்கொண்டார்கள். அவர்களின் தினசரி உணவில் தினமும் அசைவ உணவுகள் இருந்திருக்கும் என உறுதியாக கூற  முடியாது , அது அவர்களின் வேட்டையின் வெற்றியை பொறுத்தே அமையும்.. அது மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் கிடைத்துள்ள  தானியம் அரைக்கும் கற்களை ஆராய்ந்ததில் அவை 30000 வருடங்கள் முந்தையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள்  கூறுவதை பார்க்கும்போது , பேலியோ காலத்தில் தானியங்கள் உபயோக படுத்த படவில்லை எனவும் உறுதியாக எதையும் கூற இயலாது.

அதுபோல இந்த 10000 ஆண்டுகளில் நமது ஜீன்கள் எந்த மாற்றத்திற்கும் உட்படவில்லை என்பதும் மிக பெரிய அனுமானமே , அதற்கான ஆராய்சிகள் பல இன்னும் முடிவடையவில்லை. அதேபோல் நமது குடலில் வாழும் பாக்டிரியாக்கள் மற்றும் நுண்ணுயிரிகள் அப்படியே நமது முன்னோர்களுக்கு உள்ளது  போல் உள்ளதா? அவையும் எந்த மரபு மாற்றத்திற்கு உட்படவில்லையா என்பன அனைத்தும் மிக பெரிய கேள்விகளே?

அதேபோல் அவர்கள் உண்ட அசைவ உணவின் தரம் என்ன? இப்போது பண்ணைகளில் ஹோர்மோன்,ஆன்டி பயாடிக் ஊசிகள் மூலம் வளர்க்கப்படும் இறைச்சிகளின்  தரம்  என்ன?

என ஓராயிரம் கேள்விகள் ?

இவை எவற்றிற்கும் தெளிவான பதில் இல்லை, அனைத்தும் அனுமானமே. இந்த அனுமானங்களுக்கு உங்கள் உயிரை பணயம் வைக்க தயாரா? யோசியுங்கள் சிறு தானியங்கள்,நஞ்சில்லா காய்கறிகள்,பழங்கள் போன்ற இயல்பாக எளிதாய் கிடைக்கும் உணவு பொருளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வதை விட்டு ,வாத்தைபோல் மாற நினைக்கும் காக்கையாய்  ,ஆதிமனிதனாக முயற்சி செய்தால் ,உறுப்புகள் சேதப்பட்டு இருக்கும் ஒரு வாழ்க்கை நரகமாகும் என்பதே உறுதி.  இன்னும் நீங்கள் தாவர இலைகளில் உடை அணிவது,விலங்கு தோள்களில் உடை அணிவது ,மரத்தின் மீது  ஏறி வசிப்பது போன்றவை செய்தால் , முன்னோர் போல் நாமும் ஆரோக்கியமாக வாழலாம் என சென்றால், உங்கள் தலைவிதி மாற்ற பட முடியாதது.

1 comment:

  1. டேய் டேய் அடங்குடா தம்பி
    அன்புடன்
    பாலு

    ReplyDelete